Select Location
All Locations
State
Region
City / District
"எல்லாம் மாறுது.. கல்வியும் மாறுது! ஆடி, பாடி சொல்லிக்கொடுங்கள்"- அமைச்சர் ராஜ்மோகன்

"எல்லாம் மாறுது.. கல்வியும் மாறுது! ஆடி, பாடி சொல்லிக்கொடுங்கள்"- அமைச்சர் ராஜ்மோகன்

கருணையுடன் கூடிய அறிவாற்றலை முன்னிலை படுத்தக்கூடிய ஒரு கல்வி திட்டத்தை உருவாக்க போகிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “முன்பு நிலாவைக் காட்டி சோறூட்டிக் கொண்டிருந்தோம். இன்று நிலாவிற்கே சந்திராயனை ஓட்டிவிட்டார்கள். முன்பு வாசலில் தள்ளுவண்டியில் பொருட்களை விற்பனை செய்வார்கள். இன்று ஷாப்பிங் மால்களில் தள்ளுவண்டியை (ட்ராலி) நம்ம கையில கொடுத்துட்டாங்க. உணவு பழக்கவழக்கம் மாறிவிட்டது. நடையுடை பாவனை மாறிவிட்டது. எல்லாம் மாறிவிட்டது. காலம் மாறிவிட்டது. இந்த நொடி முதல் தமிழ்நாட்டின் கல்வியும் மாறுகிறது. இனி தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் கல்வி என்பது குழந்தை மையக் கல்வியாக மாறுகிறது. இனி கதைகளின் வழியே கணிதம். ஒவ்வொரு கணித வகுப்பும் கதை சொல்லல் முறையில் நடக்கப்போகிறது. தமிழ்நாடு STEM கல்வி முறையில் இருந்து STEAM முறை நோக்கி நகர்கிறோம். S - Science, T- Technology, E - Engineering, A - Arts, M - Maths. நம் பள்ளிகளில் விஞ்ஞான வகுப்புகள் கலையையும் சேர்த்த விஞ்ஞான வகுப்புகளாக இருக்கும்.

மாணவர்களின் புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும். பாடப்புத்தகங்கள் இனி படப் புத்தகங்களாக மாறும். AI யாரோட வேலையையும் பறிக்காது... prompt engineering கத்துக்கிட்டா போதும், AI-யைப் பத்தி பயப்படவே வேண்டாம். அமெரிக்கா எடுத்த பிச்சைதான் சுந்தர் பிச்சை. அவர் இல்லை என்றால் இன்று கூகுளே இல்லை. ஆகவே AI-ஐ பார்த்து பயப்பட வேண்டாம். மாணவர்களுக்கு AI-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அடித்துச் சொல்லிக் கொடுத்த காலம் போய்விட்டது. ஆடிச் சொல்லிக் கொடுங்கள், பாடிச் சொல்லிக் கொடுங்கள். எந்தப் பள்ளியிலும் ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ, சக மாணவர்களோ குழந்தைகளை `கருப்பா', `பல்லா', `குள்ளா' என்று உருவத்தைக் கேலி செய்து கூப்பிடாதீர்கள். அது அந்த குழந்தைகளை மனரீதியாகக் காயப்படுத்தும். இந்த நொடி முடல் தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம்.


Smacy News 3 hours ago
Home Flash News