நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்! ஏராளமானோர் கைது!
தில்லியில் சிஜேபி கட்சியினரின் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியில் இளைஞர்களின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்
இந்நிலையில் தில்லி போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் எஸ்எப்ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தில்லியில் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல கோவையிலும் போராட்டம் நடத்திய மாணவர்களை குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர். கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கிய சிறிது நேரத்தில் எஸ்எப்ஐ மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைதாகினர்.
தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்களின் போராட்டம் தமிழகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.