கனிமக் கொள்ளையை தடுக்க 4 கட்ட நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு அன்புமணி யோசனை
சென்னை: “எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களைக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66-ன் வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும்தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.
இந்தியாவுக்கு இயற்கை கொடுத்த கொடையான மேற்குத் தொடர்ச்சி மலை, குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வழியாக பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதி வரை நீள்கிறது. போக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப்பகுதி தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் கல் குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமக் கொள்ளை எல்லையில்லாமல் நடக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தான் இந்தக் கொள்ளை உச்சத்தை அடைந்தது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவது குறித்தும், திமுகவைச் சேர்ந்தவர் இந்தக் கடத்தலுக்கு காட் ஃபாதராக திகழ்ந்தது குறித்தும் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு கனிமவளக் கொள்ளையும் காரணமாக இருந்தது.
முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகாவது கனிமக் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகத் தோன்றினாலும் களத்தில் இன்று வரை எந்த மாற்றமும் நிகழவில்லை; தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமங்கள் கேரளத்திற்கு கடத்தப்படுவது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன. கனிமக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை. அரசு இயந்திரத்தை விட அதி நுட்பமான வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் கனிமவள மாஃபியா அதிகாரிகள் துணையுடன் அமைச்சரையும், அரசையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை ஆகும். கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் வருவதாக இருந்தால் அது குறித்து கனிமக் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களும் சுதாரித்துக் கொண்டு கனிமக் கொள்ளை நடக்கவில்லை என்று அமைச்சரை நம்ப வைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, கல் குவாரிகளில் அமைச்சர் ஆய்வு நடத்துவதும் அண்மைக் காலமாக குறைந்து விட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் ஒரே மாற்றம் என்னவென்றால், நெடுஞ்சாலைகள் வழியாக இல்லாமல் குறுக்கு வழிகளில் கனிமங்கள் கடத்தப்படுவது தான். கன்னியாகுமரியை மராட்டிய மாநிலம் பன்வேலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66-ல் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாகத் தான் கனிமவளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்தன. அதை நானே நேரடியாக பார்த்து பல தருணங்களில் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தேன். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகள் சென்றதால் ஏராளமான விபத்துகளும் ஏற்படுகின்றன. அதனால், களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கனிமங்களைக் கடத்திச் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் கனிமவளங்கள் கடத்தப்படவில்லையே தவிர, அம்மாவட்டத்தின் கொல்லங்கோடு, கோழிப்போர் விளை, ஊரம்பு, களியல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குறுக்கு சாலைகளில் புகுந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் கேரளாவுக்கு பயணிக்கின்றன. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமக் கொள்ளையும் அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது.