நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தோள்கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: வினாத்தாள் கசிந்தால், இனிமேல் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி உறுதியாகக் கூறியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து இளைஞர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி நள்ளிரவில் பிரதமர் மோடி ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டார். அதில், “வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார். கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டார். அதில், தனது வீடியோவுக்கு பதில் அளித்து ஆக்கப்பூர்வமாக கருத்துகளை பதிவிட்ட அனைருக்கும் நன்றி தெரிவித்தார்.
கடந்த 26-ம் தேதி அவர் மீண்டும் ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டார். அதில், “பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை அமல் செய்வது தொடர்பாக நந்தன் நிலகேனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி 4-வது வீடியோவை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு பிரச்சினை மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வருகிறது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு வருகின்றன. நான் ஏற்கெனவே உங்களிடம் (மாணவர்களிடம்) வாக்குறுதி அளித்தபடி சில நாட்களுக்கு முன்பு வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து இரு அவைகளிலும் விரிவான விவாதம் நடத்தப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனிமேல் வினாத்தாள் கசிவு குற்றவாளிகள் தப்ப முடியாது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் தோளோடு தோள் நின்று பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.