பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களை விரைவாக வழங்க ஏற்பாடு
சென்னை: இந்த ஆண்டு பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்கள் விரைவாக கிடைக்க தொழில்நுட்பக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கக உதவி இயக்குநர்கள் (தேர்வுகள்) கோ.கோபு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த ஏப்ரல் மாதம் (ஆர் 2023 பாடத் திட்டம்) நடைபெற்ற பட்டய (டிப்ளமோ) தேர்வுகளில் இறுதி பருவ தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நலன் கருதி அவர்களுக்கு சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி சான்றிதழ்கள் இன்று (3-ம் தேதி) முதல் 7-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 3-ம் தேதியும், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 4-ம் தேதியும், தனியார் சுயநிதி கல்லூரிகள் 5, 6, 7-ம் தேதிகளிலும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெற்றுக் கொண்ட சான்றிதழ்களை மாணவர்களுக்கு விரைவாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.