பிரவீன் சித்ரவேலின் எழுச்சிமிகு பயணம் - விவசாயக் குடும்பத்தில் இருந்து வெற்றிகரமான விளையாட்டு வீரர்!
ஏழ்மையான விவசாயக் குடும்பத்திலிருந்து இன்று வெற்றிகரமான விளையாட்டு வீரராக மாறியிருக்கிறார் இந்திய தடகள வீரர் பிரவீன் சித்ரவேல். அவரது எழுச்சிமிகு வெற்றிப் பயணம் இளைய தலைமுறைக்கு உத்வேகமான பாடமாக மாறியுள்ளது
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் டிரிப்பிள் ஜம்ப்பில் (மும்முறைத் தாண்டுதல்) இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்திய தேசியக் கொடியை சர்வதேச அரங்கில் பறக்கவிட்டு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் தமிழகத்தின் திருவாரூர் மன்னார்குடிக்கு அருகிலுள்ள செட்டிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரவீன் சித்ரவேல் இன்று சர்வதேச விளையாட்டு அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திரமாக மாறியுள்ளார். மேலும் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது குறித்து பிரவீன் சித்ரவேல் கூறியதாவது: கடந்த 2022-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின்போது 2 செ.மீ. வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தேன். அது என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இந்தமுறை அதிதீவிரப் பயிற்சியுடன் களமிறங்கினேன். திறம்பட செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது மகிழ்ச்சி. நான் மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்திலிருந்து விளையாட்டுத் துறைக்கு வந்தேன். எனது தந்தை சித்ரவேல், விவசாய தினக்கூலி தொழிலாளி.
எனது பதக்கத்தை, எனது பயணத்தில் ஆதரவளித்தவர்கள், எனது பயிற்சியாளர்கள், உடலியக்க நிபுணர்கள், சக வீரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். அவர்களே எப்போதும் எனக்குத் துணையாகவும் பலமாகவும் இருக்கின்றனர்” என்றார்.