Select Location
All Locations
State
Region
City / District
“திமுக ஆட்சி திட்டங்களின் நீட்சியே தவெக அரசின் வேளாண் பட்ஜெட்” - அன்புமணி விவரிப்பு

“திமுக ஆட்சி திட்டங்களின் நீட்சியே தவெக அரசின் வேளாண் பட்ஜெட்” - அன்புமணி விவரிப்பு

சென்னை: “வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். “தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும்போது எந்த நோக்கத்துக்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. 

வேளாண் துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. 

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News