Select Location
All Locations
State
Region
City / District
தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் குற்றாலம் அருவிகள்!

தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் குற்றாலம் அருவிகள்!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 15 மி.மீ., செங்கோட்டையில் 8 மி.மீ., அடவிநயினார் அணையில் 5 மி.மீ., தென்காசியில் 4.50 மி.மீ., கடனாநதி அணையில் 2 மி.மீ., சிவகிரியில் 1.20 மி.மீ., கருப்பாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தொடர்மழை காரணமாக கடனாநதி அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து, தற்போது அணையின் நீர்மட்டம் 73.20 அடியாக உள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 71.25 அடியாக உள்ளது. கருப்பாநதியின் அணையின் நீர்மட்டம் 48.89 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் அணையில் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 110.25 அடியாக உள்ளது. குறிப்பாக குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இன்றும் காலையில் இருந்து குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மேலும், மலைப்பகுதியில் பொழிந்த மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர் மழை மற்றும் சீரான நீர்வரத்து காரணமாக புலியருவி, சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும், ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சில மணி நேரங்கள் கழித்து நீர்வரத்து சீரடைந்த பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Hindu Tamil 2 hours ago
Home Flash News