Select Location
All Locations
State
Region
City / District
சமானிய மக்களுக்கு ‘யுபிஐ கட்டண’ சுமையா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

சமானிய மக்களுக்கு ‘யுபிஐ கட்டண’ சுமையா? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: “யுபிஐ பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்கும் முறை எதிர்காலத்தில் அமல்படுத்தப்படுமானால் அப்போது, வணிகர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படுமே தவிர, வாடிக்கையாளர்களிடம் இருந்து அல்ல” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நேற்று (ஆக.6) நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை கட்டணம் இல்லாமல் இருந்த நிலையை, வரி விதிப்பு மற்றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா மாற்றுகிறது. எதிர்காலத்தில் அனைத்து வகையான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதை இது எளிதாக்கும். இதன் சுமை இறுதியில் சாமானிய மக்கள் மீதே விழும். இனி அவர்கள் யுபிஐ செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்” என தெரிவித்திருந்தார்.

ஜெயராம் ரமேஷின் பதிவை டேக் செய்து, அதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒரு தவறான தகவலை பரப்புவதற்கு முன் இவற்றைக் கவனியுங்கள்.

1. வணிகர் தள்ளுபடி விகிதம் (எம்டிஆர்) என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். பயனர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ அல்ல. வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு, புத்தாக்கம், பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு செய்ய இது உதவும். யுபிஐ செயலியை பயன்படுத்தும் அனைவரும இந்த முதலீட்டின் பலன்களைப் பெறுவார்கள். 

2. மிக முக்கியமாக, எம்டிஆர் குறித்து என்பிசிஐ தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007-ன் பிரிவு 10ஏ-வை திருத்த முன்மொழியும் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்னரே இது நடைபெறும். 

3. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது உங்கள் கட்சியான காங்கிரஸ் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்றிருந்தால் இவை அனைத்தையும் அவையிலேயே விவாதித்திருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்​களவை​யில் நேற்று கடும் அமளிக்கு நடுவே வரி விதிப்பு மற்றும் இதர சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து பொருளா​தார நிபுணர்​கள் கூறும்போது, “தற்​போதைய சட்ட விதி​களின்​படி ஆர்​டிஜிஎஸ், என்​இஎப்டி பணப் பரி​மாற்​றங்​களுக்கு மட்​டுமே வங்​கி​கள் கட்​ட​ணம் விதிக்கின்​றன. புதிய மசோ​தா​வின்​படி இனி யுபிஐ, ரூபே கார்டு பணப் பரிவர்த்​தனை​களுக்​கும் கட்​ட​ணம் விதிக்​கப்​படும். இதனால் பொது​மக்களுக்கு பா​திப்பு இருக்​காது. காய்​கறி, பால் வாங்​கு​வது உள்​ளிட்ட அன்​றாட செல​வு​களுக்​கான யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு கட்​ட​ணம் வி​திக்​கப்​ப​டாது. மிகப்​பெரிய வணிக நிறு​வனங்​களுக்​கு மட்​டுமே கட்​ட​ணம்​ வி​திக்​கப்​படும்​” என்றனர்.


Hindu Tamil 3 hours ago
Home Flash News