Select Location
All Locations
State
Region
City / District
பழநி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்: நயினார் நாகேந்திரன் புகார்

பழநி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்: நயினார் நாகேந்திரன் புகார்

சென்னை: பழநி நில மோசடி வழக்கில் தொடரும் மரமங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சு வலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார் பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.

முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சு வலி வரும் ? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல் நலக்குறைவு ஏற்படும் ? தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து. காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை. 

எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். இம்மரணத்தின் உண்மையான பின்னணி மற்றும் வழக்கில் தொடரும் மர்மங்கள் குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார் பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.


Hindu Tamil 5 hours ago
Home Flash News