அமெரிக்க டாலர் ‘ஆதிக்கம்’ சிறுக சிறுக சரியத் தொடங்கிவிட்டதா? - ஒரு தெளிவுப் பார்வை
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு என்ற பட்டியலில், ஏற்கெனவே அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடித்துவிட்டது. உலக வங்கியின் கணிப்புபடி, வாங்கும் திறன் சமநிலையின் (PPP) அடிப்படையில் சீனா 41.26 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அமெரிக்கா 30.77 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரமாகச் சரிந்துவிட்டது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சர்வதேச வர்த்தகத்திலும் நிதிமுறையிலும் அமெரிக்க டாலர்தான் கோலோச்சுகிறது. டாலரின் இந்த ஆதிக்கம் இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடரும் என்ற கேள்வி தற்போது எழுகிறது. இது குறித்துக் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் பேரி எய்ச்சன் கிரீன் ‘மணி பியாண்ட் பார்டர்ஸ்’ (Money Beyond Borders) என்ற நூலில், டாலரின் ஆதிக்கம் குறைவது குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
ஆந்தை நாணயம் நாணயங்களின் வரலாற்றைப் பார்த்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரேயொரு கரன்சிதான் சர்வதேச வர்த்தகத்தில் கோலோச்சி வருகிறது. அது அமெரிக்க டாலர் மட்டும்தான். சர்வதேச அளவில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் ஏதென்ஸின் ‘ஆந்தைகள்’ நாணயங்களே ஆகும். கி.மு. 117-ல் ரோமானியப் பேரரசின் நாணயங்கள் சர்வதேச நாணயமாகத் திகழ்ந்தன. கி.மு. 5-ம் நூற்றாண்டில், பிரிட்டன் முதல் இந்தியா வரையிலான வர்த்தகத்துக்கு பைசான்டைன் தங்க ‘சொலிடஸ்’ நாணயம் பயன்படுத்தப்பட்டது.