ஆக.15 கிராம சபை கூட்டங்களில் மேகேதாட்டு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி கோரிக்கை
சென்னை: ஆக.15-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசால் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில், மொழி, இனவெறி அமைப்புகளால் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களையும் கர்நாடக அரசு ஊக்குவித்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு எதிரான நல்லுறவை சிதைக்கும் வகையிலான கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தைக் கூட கர்நாடக அரசால் கூற முடியாது.
கர்நாடகத் தலைநகர் பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவே மேகேதாட்டு அணையை கட்ட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. மேகேதாட்டு அணைக்காக கர்நாடக அரசின் முன்வைக்கப்படும் ஒரே வாதம் இது மட்டும் தான். ஆனால், இந்த வாதம் தவறு என்பதற்கு பல காரணங்களை பாமக ஏற்கனவே முன்வைத்துள்ளது. பெங்களூருக்குத் தேவையான அளவு குடிநீரை இப்போதுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், அதிலிருந்து 4 டிஎம்சி நீரை பெங்களூருக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். ஆனால், அதுவே தேவையில்லை என்ற குரல்கள் கர்நாடக அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்துள்ளன.
மேகேதாட்டு அணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் பெங்களூர் நகரத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால், பெங்களூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள டி.ஜி.ஹள்ளி எனப்படும் திப்பகன்டன ஹள்ளி அணையில் இன்றைய நிலையில் 2.2 டி.எம்.சி நீர் உள்ளது. 74 அடி உயரம் கொண்ட இந்த அணையில் அதிகபட்சமாக 3.4 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நீரை பெங்களூருக்கு கொண்டு செல்ல ஏற்கனவே குழாய் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணையின் நீரை பயன்படுத்திக் கொள்ள கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.