ODI WC 2027 தொடரின் வடிவத்தில் மாற்றம்: ஸ்காட்லாந்து, நெதர்லாந்து கடும் காட்டம்
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடருக்கு 18 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்க ஐசிசி (ICC) எடுத்துள்ள முடிவின் மீது கிரிக்கெட் ஸ்காட்லாந்து மற்றும் ராயல் டச்சு கிரிக்கெட் சங்கம் (KNCB) ஆகியவை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. கடந்த மாதம், ஐசிசி உலகக் கோப்பையின் ‘சூப்பர் சீரிஸ்’ கட்டத்தை அறிமுகப்படுத்தியது; இதில் தகுதி பெறும் அணிகளில் 12, 13 மற்றும் 14-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒரு முத்தரப்புத் தொடரில் மோதும். இத்தொடரில் வெற்றி பெறும் ஒரே ஒரு அணி மட்டுமே உலகக் கோப்பையின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும்; அங்கு 12 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
12 அணிகள் தலா ஆறு அணிகள் வீதம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 3 அணிகள் தகுதி பெற இந்த 6 அணிகளுடன் அடுத்தக் கட்டத்தில் புள்ளிகள் அளவிலோ, நிகர ரன் விகிதத்திலோ சிறப்பாக உள்ள ஒரே அணி சூப்பர் 7 சுற்றில் ஆடும், இந்த ரவுண்ட் ராபின் சுற்றில் எல்லா அணிகளும் எல்லா அணிகளுடன் மோத வேண்டும், இதில் டாப் 4 அரையிறுதிக்குச் செல்லும், அதிலிருந்து 2 அணிகள் இறுதிக்குச் செல்லும். இதுதான் இப்போது செய்துள்ள மாற்றம்.
இதில் புதிய மாற்றம் என்னவெனில் 10 அணிகள் மட்டுமே ரவுண்ட் ராபினில் விளையாடும் தொடராக இருந்த உலகக் கோப்பை இப்போது 11 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் பெரிய தந்திரம் என்னவெனில் இங்கிலாந்து தகுதிச் சுற்று ஆடித்தான் தகுதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்படி ஏதாவது இங்கிலாந்து தகுதி பெற முடியாமல் போய் விட்டால் அது உலகக் கோப்பைக்கே, கிரிக்கெட்டின் பெரிய அணிக்கே ஏற்படும் இழுக்கு என்று இங்கிலாந்தை நேரடித் தகுதி பெறச் செய்ய இந்த மாற்றத்தை அவசரம் அவசரமாகக் ஐசிசி கொண்டு வந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால், வங்கதேசம் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஒருநாள் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றதால் வங்கதேசம் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னால் செல்ல முடியாமல் போனதால் இங்கிலாந்து தப்பியது என்பது வேறு கதை.