நாடாளுமன்ற முடக்கம்: ஓம் பிர்லா கவலையும், கார்கே முன்வைத்த 3 நிபந்தனைகளும்
புதுடெல்லி: நாடாளுமன்ற தொடர் முடக்கம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவலை தெரிவித்த நிலையில், நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க எதிர்க்கட்சிகளின் மூன்று கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்ற முடக்கம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், “உறுப்பினர்களே, கேள்வி நேரம் என்பது அவையின் மிக முக்கியமான நடவடிக்கைகள் அரங்கேறும் நேரம். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன்.
கேள்வி நேரத்தில் அதற்கான அலுவல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்திருக்கிறேன். அதனால் கேள்வி நேரத்தை சமுகமாக நடத்த ஒத்துழையுங்கள். அவை சுமுகமாக நடைபெறுவதையே நாட்டின் மக்களும் விரும்புகின்றனர். நேற்று நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்திலும் நான் உறுப்பினர்கள் அனைவரிடமும் அவையை நடத்த ஒத்துழைப்பு தருமாறு வேண்டினேன். நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதாக்கள் விவாதத்துக்கு காத்திருக்கின்றன. அவற்றின் மீது ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவது அவசியம்.
மாணவர்கள் போராட்டம் குறித்து அவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறார் என்பதையும் நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அவையை சுமுகமாக நடத்த ஒருமித்த கருத்தை எட்டவேண்டும்” என்று கூறியிருந்தார். கார்கே எதிர்வினை: இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எங்களுக்கு மூன்று குறிப்பிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவது டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடந்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பானது. அந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டது யார் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதன் நிமித்தமாக அவையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.