எபோலோ வைரஸ் பாதிப்பு: காங்கோவில் 2,000-ஐ கடந்த உயிரிழப்பு
கின்ஷாசா: காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா வைரஸ் காரணமாக இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய எபோலா பாதிப்புகளைவிட இது மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அரசு தரவுகளின்படி, இதுவரை 4,381 பேருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 704 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த எபோலா பாதிப்பு மே 15-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இது வரலாற்றிலேயே வேகமாகப் பரவி வரும் எபோலா பாதிப்பாக மாறியுள்ளது. கடந்த மே மாதத்தில் எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் ஆயிரம் உயிரிழப்புகளை எட்டுவதற்கு சுமார் 9 வாரங்கள் ஆன நிலையில், அடுத்த ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட சுமார் 3 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்தப் பாதிப்பு உண்மையில் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கியதாகவும், அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே வைரஸ்பரவத் தொடங்கியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.