அதிமுக எம்எல்ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டப்பேரவையில் கூச்சல், அமளி - அதிமுக - தவெக உறுப்பினர்கள் காரசார விவாதம்
சென்னை: அதிமுக எம்எல்ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கூச்சலும் அமளியும் ஏற்பட்டது. அப்போது தவெக - அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
முன்னாள் முதல்வர் பழனிசாமி: கடந்த 3 மாதங்களில் தவெக அரசின் குறிப்பிடத்தக்க சாதனை ஏதோ ஒரு பேரம் நடத்தி சில கட்சிகளையும், கட்சி உறுப்பினர்களையும் வாங்கியதுதான். இதுதான் இந்த அரசி்ன் சிறப்பான சாதனை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: 2017-க்கு முன்பு இருந்த அதிமுக ஆட்சியில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. அது ஜெயலலிதாவின் ஆட்சி. ஆனால், 2017-க்கு பிறகு உங்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அது ஜெயலலிதா ஆட்சி கிடையாது.
ஜெயலலிதா இருந்தவரை நீட் வரவில்லை, சிஏஏ வரவில்லை. அதனால்தான் எங்கள் முதல்வர் நீர்த்துப்போன ஆட்சி என்று உங்களை சொனனார். உங்கள் மீது நம்பிக்கை இருந்திருந்தால், உங்கள் உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் அதிமுக தொண்டர்கள் முழுவதுமாக விலகியதால் தான் எம்ஜிஆரின் விசுவாசிகளும் ஜெயலலிதாவின் விசுவாசிகளும் தவெகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். பேரம் என்று சொல்வது தவறு.
உறுப்பினர்கள் கட்சித் தலைமை மீது நம்பிக்கை இழந்து ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் சேர்வது இயல்பு. அமைச்சர் சி.டி. நிர்மல்குமார்: இது கூவத்தூர் இல்லை. தானாக முன்வந்து ராஜினாமா செய்து எங்கள் கட்சியில் சேர்ந்து உள்ளனர். இதில் எந்த கூவத்தூர் நிகழ்ச்சியும் நடைபெறவில்லை (அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்த முக்கூர் சுப்ரமணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து, அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தமிட்டனர்.