House of the Dragon S3: அரியணைப் போரில் தவறவிட்ட சுவாரஸ்யம் | ஓடிடி திரை அலசல்
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெஸ்டரோஸ் உலகுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியாக வந்த ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ முதல் சீசன் ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் காப்பாற்றியது. ஆனால் இரண்டாவது சீசன் பெரும் ஏமாற்றத்துடனேயே முடிந்தது. இந்தச் சூழலில், டார்கேரியன் வம்சத்தின் உள்நாட்டுப் போரான 'டான்ஸ் ஆஃப் தி டிராகன்ஸ்' முழு வீச்சில் வெடிக்கும் என்ற மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இதன் 3-வது சீசன், பார்வையாளர்களுக்கு திருப்தியளித்ததா என்றால், ஏமாற்றமே அதிகமாக மிஞ்சுகிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சி அமைப்புகளிலும் இத்தொடர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. பிரம்மாண்டமான தயாரிப்புத் தரம் ஒவ்வொரு எபிசோடிலும் வெளிப்படுகிறது. குறிப்பாக, முந்தைய சீசன்களை விட இதில் டிராகன்களுக்கு இடையே நடக்கும் வான்வெளி மோதல் காட்சிகள் மிக நேர்த்தியாகவும், வியக்க வைக்கும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளன
குறிப்பாக டிராகன்களின் உடலில் இருக்கும் செதில்கள் தொடங்கி அவை பறக்கும் காற்றில் அசையும் அதன் உடல் வரை பார்த்து பார்த்து அதீத துல்லியத்துடன் செதுக்கியுள்ளனர். வெஸ்டரோஸின் நிலப்பரப்புகள், அரண்மனை அரங்குகள் மற்றும் சிஜிஐ தொழில்நுட்பம் ஆகியவை ஒரு புதிய சாதனையை படைத்துள்ளன
கூர்மையான திரைக்கதையோ அல்லது திருப்பங்களோ, கவனம் ஈர்க்கும் வசனங்களோ எதுவும் இல்லை. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் லிட்டில்ஃபிங்கர், லார்ட் வாரிஸ், டிரியன் லேனிஸ்டர் போன்ற துணை கதாபாத்திரங்கள் சதுரங்கம் ஆடுவது போல் வியூகங்களை அமைப்பார்கள். அப்படியாக இதில் வரும் காட்சிகள் மிகவும் பலவீனமாகவும், முன்னரே கணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ சீசன் 3 பார்வைக்கு மிகவும் பிரம்மாண்டமான ஒரு தொடர்தான். ஆனால், ஒரு சிறந்த கதைசொல்லலுக்கும், விறுவிறுப்பான திரைக்கதைக்கும் வெறும் காட்சிப் பிரம்மாண்டமும் டிராகன்களும் மட்டுமே போதாது என்பதை இந்த சீசன் உணர்த்தியுள்ளது.