சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்!
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்று முதல் நான்கு மடங்கு வரை சொத்து வரி அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்து வரி உள்ளது. சொத்து வரி மூலம் கிடைக்கும் வருவாய் மூலமே, சென்னைக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான குப்பை அகற்றுதல், மின் விளக்குகள், சாலைகள், பூங்காக்கள் பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள வீடுகள், கட்டடங்களுக்கான சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக உரிமையாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். உதாரணமாக, சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூ. 5,000 சொத்து வரி செலுத்தப்பட்ட கட்டடத்துக்கு, இந்தாண்டு ரூ. 28,000 விதிக்கப்பட்டுள்ளதாக் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். எந்த வித காரணமும் இன்றி, முறையான முன்னறிவிப்பும் இன்றி திடீரென சொத்து வரியைப் பல மடங்கு உயர்த்தியிருப்பதை ஏற்க முடியாது என்று இணையத்தில் மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.