ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம்! ஜெ.பி. நட்டா காட்டம்!
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியைப் பார்க்க நேர்ந்தது ஜனநாயகத்துக்கு துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார். நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து தில்லியில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் இல்லாமலேயே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது, “பிரதமா் மோடியின் மனதில் வெளிநாட்டுத் தலைவா்களை கட்டியணைப்பதுதான் வெளியுறவுக் கொள்கை என்ற கருத்தை யாரோ விதைத்துவிட்டனா்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பாஜக நிர்வாகிகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெ.பி. நட்டா தெரிவித்திருப்பதாவது: “ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி இருப்பதைப் பார்க்க நேர்ந்தது, நாட்டின் ஜனநாயகத்திற்கு துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையிலும், ராகுல் காந்தியைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பது எத்தகைய துயரமான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.