சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி, தில்லி செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தில்லி செங்கோட்டையில் நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதனையொட்டி, தில்லி உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2.11 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும், சுதந்திர தின விழா நடைபெறும் செங்கோட்டையும் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, ஜாம் நகர் ஹவுஸ், ஜண்டேவாலனில் உள்ள ஃப்ளேடட் கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது டெர்மினல் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.