பாரதிராஜா, பாக்யராஜ் புகழஞ்சலி விழா; நெகிழ்ந்து பேசிய ரஜினி, கமல்!
மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோருக்கு ‘ராஜகோபுரங்கள் - நினைவு உற்சவம்’ என்ற பெயரில் தமிழ் திரைப்பட சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு சிலை திறக்கப்பட்டது. இதனை கமல் திறந்து வைத்தார். பின்பு மேடையில் அவர் பேசியதாவது, “இருவருடனும் பணியாற்றியுள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் சினிமாவில் இருவரும் ஆழமாக வேரூன்றியவர்கள், தமிழ் சினிமாவின் அடையாளங்களாகவும் திகழ்ந்தவர்கள். வெற்றி தோல்வி, போலியான புகழ்ச்சிகளை கடந்து திரையுலகின் வளர்ச்சிப் பாதையில் பயணித்தவர்கள். இவர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பே நிச்சயம் சாதிப்பார்கள் என்பதை நான் முன்கூட்டியே அறிந்தேன். அரசுகளின் உதவியோடு திரையுலகை மேலும் ஊக்குவிக்க வேண்டும். சாதாரண திரை தொழிலாளி ஒருவர் இந்தியாவின் மிகப்பெரிய விருது பெறும் நாளை நான் நேரில் காண விரும்புகிறேன்” என்றார்.
இதே மேடையில் ரஜினி பேசுகையில், “பாரதிராஜா, ஒருவரிடம் இருக்கும் விஷயங்களை வெளியே கொண்டு வந்து, அதை எப்படி ஒரு படைப்பாக மாற்றுவது என்று யோசிப்பார். பாக்யராஜ், ஒரு கதையை உள்வாங்கி அதை எப்படி வேறுவிதமாக கொண்டு போகலாம் என்று யோசிப்பார். பழைய திரைப்படங்களில் பிரமாண்டமான காட்சிகள் இருக்கும். அதையெல்லாம் மாற்றிய பாரதிராஜா, கிராமங்களில் டெய்லர், பார்பர் போன்ற கதாபாத்திரங்களை வைத்து படத்தை உருவாக்கி வெற்றிபெற்றார். ரஜினிகாந்த் ஹீரோவாகி, முன்பிருந்த பிம்பங்களை உடைத்தார் என்பது இல்லை. பாரதிராஜாதான் அதை உடைத்தார்.
பாரதிராஜாவும், பாக்யராஜூம் கடவுள் அனுப்பிய குழந்தைகள். தங்களது திறமையாலும், உழைப்பாலும் முன்னேறினார்கள் என்றால் நான் நம்ப மாட்டேன். எத்தனையோ திறமைசாலிகள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், சந்தர்ப்பம் கிடைப்பவர்கள் மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை கடவுள்தான் அளிப்பார். எல்லாரும் ரெஸ்ட் இன் பீஸ் என (Rest in peace) என சொல்வார்கள், ஆனால் நான் ரிட்டர்ன் இஃப் பாசிபிள் (Return if possible) என்பேன்” என்றார்.