Select Location
All Locations
State
Region
City / District
ராமநாதபுரத்தில் ‘கள்ளக்கடல் சீற்ற’ அபாயம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

ராமநாதபுரத்தில் ‘கள்ளக்கடல் சீற்ற’ அபாயம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கள்ளக் கடல் சீற்ற நிகழ்வுக்கான எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஆக.20) நாளை வரை விடுத்துள்ளது. முன்னறிவிப்பின்றி திடீரெனக் கடலில் ஏற்படும் உயர் அலைகள் மற்றும் கடல் சீற்றத்தையே 'கள்ளக்கடல்' (Swell Surge) என்று அழைக்கின்றனர். “கள்ளக்கடல் என்ற சொல் மலையாளத்திலிருந்து பெறப்பட்டது. 'கள்ளன் + கடல்', கள்ளன் என்றால் திருடன். திருடன் போல எந்தவித சத்தமும், முன்னறிவிப்பும் இல்லாமல் மக்கள் வசிக்கும் கரையோரப் பகுதிகளில் கொந்தளிப்புடன் நுழையும் கடல் நீர் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் கேரளம், தென் தமிழகம் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு கள்ளக்கடல் நிகழ்வு இன்று (புதன் கிழமை) முதல் ஆக.20ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அனைவரும் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் அவ்வப்போது எழும் அலைகளின் சீற்றம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். நாட்டுப் படகு மீனவர்கள் கரையோரம் நடைபெறக்கூடும் அலைகளின் சீற்றம் காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைவதைத் தவிர்க்க, அவற்றுக்கிடையே போதிய இடைவெளி விட்டு நங்கூரமிட்டுவைத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News