கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரை ‘கேரளம் மெட்ரோ ரயில் நிறுவனம்' என மாற்றம் செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை
கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பெயரை ‘கேரளம் மெட்ரோ ரயில் நிறுவனம்' என மாற்றம் செய்ய மாநில அரசுக்கு அந்நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. கொச்சி தவிர்த்து மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை கொச்சி மெட்ரோவின் நிர்வாக இயக்குநர் லோக்நாத் பெஹ்ரா மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளார் தற்போதைய கொச்சி மெட்ரோ நகரம் சார்ந்த பெயராக உள்ளது. ஆனால் இந்நிறுவனம் தற்போது திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு மெட்ரோ திட்டங்கள், கொச்சி வாட்டர் மெட்ரோ (Kochi Water Metro) மற்றும் மின்சாரப் போக்குவரத்து (Electric Mobility) என கேரளா முழுவதும் தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் மெட்ரோ கொள்கைகளின் அடிப்படையில் இப்பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக நாக்பூர் மெட்ரோ – 'மகாராஷ்டிரா மெட்ரோ' என்றும், லக்னோ மெட்ரோ – 'உத்தரப் பிரதேச மெட்ரோ' என்றும் பெயர் மாற்றப்பட்டது போல மாற்றம் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு கேரள அரசு முதலில் முதற்கட்ட கொள்கை அனுமதியை வழங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்குதாரர்கள், மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல்கள் பெறப்படும். இந்த பெயர் மாற்றத்தால் கொச்சி மெட்ரோவின் தற்போதைய சொத்துக்கள், பொறுப்புகள், ஒப்பந்தங்கள், ஊழியர்களின் வேலைவாய்ப்பு அல்லது நிறுவனத்தின் சட்டப்பூர்வ இருப்பு ஆகியவற்றில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று லோக்நாத் பெஹ்ரா தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கான செலவுகள் நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும்