தஞ்சை: சர்வர் பிரச்சினையால் செயல்படாத இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்த ரேஷன் கடை பணியாளர்கள்
தஞ்சாவூர்: சர்வர் பிரச்சினையால் செயல்படாத இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கடை பணியாளர்கள் இன்று (ஆக.21) ஒப்படைத்தனர். தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு, இன்று காலை தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் வந்தனர். சங்கத்தின் வட்டத் தலைவர் கே.பிரகாஷ் தலைமையில், வட்ட செயலாளர் பி.லோகநாதன், வட்ட பொருளாளர் ஏ.ரவி, மாவட்ட இணை செயலாளர் எம்.சிவகுருநாதன் முன்னிலையில் பணியாளர்கள், சர்வர் பிரச்சினையால் செயல்படாத பிஓஎஸ் இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலர் டி.ஹெலனிடம் வழங்கினர்.
முன்னதாக ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது: “கடந்த 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பிஓஎஸ் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தில் பொருட்களை வாங்குபவர் தனது கைரேகையை பதிவு செய்தால் தான், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். இந்த இயந்திரங்கள் வழங்கி 12 ஆண்டுகள் ஆன நிலையில் பல இடங்களில் பழதாகி வருகிறது. புதிய இயந்திரங்கள் வழங்கவில்லை. மேலும், கடந்த 15 நாட்களாக சர்வர் பிரச்சினையினால், மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால் தினமும் பொதுமக்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.
உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் சர்வர் பிரச்சினையை தீர்க்கவில்லை. இதனால் இன்று தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள 91 கடைகளிலிருந்து இயந்திரங்களை கொண்டு வந்து ஒப்படைத்துள்ளோம்” என்றனர். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் டி.ஹெலன் கூறியது: “கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் உள்ள பிஓஎஸ் மிஷின் சர்வர் பிரச்சினை தொடர்பாக செயல்படவில்லை என பணியாளர்கள் தெரிவித்தனர். நாங்களும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது பணியாளர்கள் இயந்திரங்களை கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தி, விரைவில் தீர்வு காணப்படும்” என்று வட்ட வழங்கல் அலுவலர் கூறினார்.