ஒரே நாளில் ரூ.1,125 கோடி கடனுதவி! இந்தியன் வங்கி பிரமாண்ட கடன் முகாம்!
சென்னையில் நடைபெற்ற இந்தியன் வங்கியின் சில்லறை வணிகர்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பிரமாண்ட கடன் முகாமில் ரூ.1,125 கோடி கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியின் சென்னை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் சில்லறை வணிகர்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கான கடன் வழங்கும் முகாம், சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது.
இந்தியன் வங்கியின் சென்னை மண்டல வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, மற்றும் சில்லறை வணிகம், சிறு, குறு தொழில் பிரிவுக்கான தலைமைப் பொது மேலாளர் தலைமையில், இந்த கடன் வழங்கும் முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கடன் பெற விண்ணப்பித்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கடன் ஒப்புதல் கடிதங்களை வழங்கினார்.
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதிலும், சில்லறை வர்த்தகம், விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் துறைகளின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் வங்கி கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த முகாம், வளர்ந்த இந்தியா (விக்சித் பாரத்) எனும் தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் வகையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்த முகாமில், ரூ. 2,080 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் ரூ.1,125 கோடிக்கு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரே நாளிலேயே ரூ. 575 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சில்லறை வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், மொத்தம் ரூ. 207 கோடி கடன்களுக்கான ஒப்புதல் கடிதங்களை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி 46 பயனாளிகளுக்கு வழங்கினார்.