Select Location
All Locations
State
Region
City / District
மீண்டும் இணைந்த ‘சிவாஜி’ காம்போ; ‘தர்மன்’ படப்பிடிப்பில் ஸ்ரேயா!

மீண்டும் இணைந்த ‘சிவாஜி’ காம்போ; ‘தர்மன்’ படப்பிடிப்பில் ஸ்ரேயா!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்மன்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமலும் டர்மெரிக் மீடியா சார்பில் மகேந்திரனும் தயாரிக்கின்றனர். சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர்.

இப்படம் ஒரு ஸ்டைலான டாக்டரின் வாழ்க்கையின் பின்னணியில் குடும்ப ரசிகர்களும் பார்க்கும்படியான த்ரில்லர் ஜானரில் படம் உருவாவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படமும் வேட்டையாடு விளையாடு படமும் கலந்த ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. நேற்று முதல் ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் ரஜினியுடன் ஒரு புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் ரஜினி தர்மன் பட கெட்டப்பில் இருக்கிறார். இதனால் இப்படத்தில் ஸ்ரேயா நடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடுவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. ரஜினியும் ஸ்ரேயாவும் ‘சிவாஜி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு மீண்டும் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஸ்ரேயா ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்பு திருமணத்திற்குப் பிறகு குறைந்த படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதையடுத்து மெட்ரோ சிரிஷ் நடிக்கும் ‘நான் வையலன்ஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகியிருந்தது. இதையடுத்து அவர் எந்த தமிழ் படங்களில் கமிட்டாகாத நிலையில் தற்போது தர்மன் படம் மூலம் மீண்டும் நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.


Nakkeeran 37 minutes ago
Home Flash News