1,500 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: டிஆர்டிஓ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, 1,000 முதல் 1,500 கி.மீ. வரையில் உள்ள இலக்கைத் தாக்கும் நீண்டதூரத் தரைவழித் தாக்குதல் க்ரூஸ் ஏவுகணை மற்றும் 150 முதல் 500 கி.மீ. இலக்கை தாக்கும் 'பிரளய்' ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக முன்னணித் தனியார் நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முன்னதாக, 110 கி.மீ. இலக்கைத் தாக்கும் அஸ்ட்ரா மார்க் மற்றும் 150 கி.மீ. இலக்கை தாக்கும் அஸ்ட்ரா மார்க் II ரக வான்வழி ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான முன்மொழிவுக் கோரிக்கைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐகாம், பாரத் போர்ஜ், அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுத உற்பத்தியில் ஈடுபடவுள்ளன. மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்க தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் உத்திசார் ஏவுகணை துறையையும் தனியார் துறைக்குத் திறப்பதற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. தற்போது ஏவுகணை தயாரிப்புக்குத் தேவையான 50-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளை தனியார் துறை நிறுவனங்களே வழங்கி வருகின்றன. இந்த முடிவின் மூலம் ஏவுகணை உற்பத்தியின் அளவு பெருமளவில் அதிகரிப்பதுடன், சுயசார்பு இந்தியா திட்டத்துக்கும் நாட்டின் ராணுவத் தொழில்முறை கட்டமைப்புக்கும் மிகப்பெரிய பலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.