குற்றாலம் அருவிகளில் குறைந்தது நீர் வரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தென்காசி: குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பொழியும்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் தென்காசி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை, குண்டாறு அணை ஆகியவை நீர் வரத்தை பெறும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் அணைகள் முழு கொள்ளளவை எட்டும்.
ஆனால், இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. குண்டாறு அணை மட்டுமே முழு கொள்ளளவை எட்டியது. மற்ற அணைகள் எதுவும் முழுமையாக நிரம்பவில்லை. இருப்பினும், அவ்வப்போது பெய்த மழையால் அணைகள் ஓரளவு நீர்வரத்தை பெற்றன. ஆனால், பெரும்பாலான குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் குற்றாலம் அருவிகள் சில நாட்கள் ஆர்ப்பரித்து கொட்டின. ஆனால் மழை நீடிக்காமல் அடுத்த சில நாட்களில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த சில நாட்களாக பகவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சாரல் இல்லாததால் வறண்ட காற்று வீசுகிறது. இதனால், குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சாரல் மழை இல்லாததால் குற்றாலத்திலும் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஐந்தருவி, பிரதான அருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நீர் வரத்து குறைவாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அருவியில் குளிர்ந்த நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.