நித்யானந்தா இந்தியாவுக்கு ரிட்டர்ன்? -முதல்வருக்கு வந்த அதிரடி கோரிக்கை
இந்தியாவிலிருந்து திடீரெனத் தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கைலாசா என்ற தனித் தீவு நாட்டை உருவாக்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தொடர் பரபரப்பைக் கிளப்பி வரும் நித்யானந்தா, மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக எழுந்துள்ள ரகசியத் தகவல் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
புதுச்சேரிக்கு நித்யானந்தா நேரடியாக வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் வெளியான செய்தி, தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அண்மையில் ஒரு விசித்திரமான ஆன்மீகக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். தங்களைச் கைலாசா ஆன்மீகத் தூதரகத்திலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பிரதிநிதிகள்,தொடக்கத்தில் முதலமைச்சருக்கு ஒரு சிறப்புப் புத்தகத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர்.
அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த பிறகுதான், அவர்கள் நித்யானந்தாவின் சீடர்கள் என்பதும், கைலாசா தூதரகத்தின் பெயரால் அவர்கள் வந்துள்ளனர் என்பதும் முதலமைச்சருக்கே தெரியவந்துள்ளது. அந்தக் குழுவினர் முதலமைச்சரிடம் ஒரு முக்கிய அழைப்பை விடுத்துள்ளனர். புதுச்சேரியின் ஏம்பளம் கிராமத்தில் நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் ஒரு பிரம்மாண்ட தியானபீடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆசிரமம் பல்வேறு கடுமையான சர்ச்சைகளில் சிக்கியபோது, உள்ளூர் மக்களால் அடித்து உடைக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த ஆசிரமம் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, அங்குள்ள கைலாச ஞான பீடத்திற்கு விரைவில் மகா கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காகவே நித்யானந்தா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேரடியாகப் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த முதல்வர் ரங்கசாமி, "அவர் தற்போது கைலாசாவில் அல்லவா இருக்கிறார், அவர் எப்படி இங்கு வர முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த தூதுக் குழுவினர், நித்யானந்தா இந்தியா திரும்புவதற்கான சட்டப்பூர்வப் பயண ஏற்பாடுகள் மற்றும் அனுமதிகள் குறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே முறையான கோரிக்கைகளை வைத்துள்ளதாகக் கூறியுள்ளனர. மேலும், இந்த குடமுழுக்கு விழாவில் முதலமைச்சரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு வரும் நித்யானந்தாவிற்கு அரசாங்க ரீதியாக உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டம் மற்றும் நீதிமன்றப் பிடிகளிலிருந்து தப்பி ஓடிய நித்யானந்தா, மத்திய அரசின் அனுமதியோடு மீண்டும் தமிழக எல்லைக்குள் கால் பதிக்கப் போகிறார் என்று பரவும் இந்தச் செய்தி, எதிர்பார்ப்புக்ளை எகிற வைத்துள்ளது.