ஐரோப்பாவின் டீசல் தேவையில் 60% இந்தியா வழங்கியது
புதுடெல்லி: ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து டீசல் விநியோகம் குறைந்ததால், ஐரோப்பிய நாடுகளின் ஆகஸ்ட் மாத டீசல் தேவையில் 60 சதவீதத்தை இந்தியா வழங்கி உள்ளது. இது தொடர்பாக ஆற்றல் பகுப்பாய்வு நிறுவனமான வோர்டெக்சா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாப்-எல்-மந்தேப் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 2,00,000 பேரல் டீசல் அல்லது காஸ் ஆயில் கடந்து சென்றுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விநியோகம் கிட்டத்தட்ட தடைபட்டிருந்த நிலையில், இப்போது கடந்த ஆண்டின் அளவை நெருங்கியுள்ளது. இதில் சுமார் 60 சதவீதம் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி உள்ளது.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்புகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கான ரஷ்யாவின் டீசல் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதுபோல ஐரோப்பாவுக்கு தேவையான டீசலில் பெரும்பகுதியை அமெரிக்கா ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் விநியோகமும் கடந்த 15 நாட்களாக குறைந்துள்ளது. ரஷ்யா, அமெரிக்காவின் விநியோகம் குறைந்ததே, இந்தியாவின் ஐரோப்பிய நாடுகளுக்கான டீசல் ஏற்றுமதி அதிகரித்ததற்குக் காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பெட்ரோலிய பொருள் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 258.1 மில்லியன் டன்னாக உள்ளது. இது உள்நாட்டு எரிபொருள் தேவையை விட அதிகமாகும். 2025-26-ம் ஆண்டில் இந்தியா 61.5 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.