Select Location
All Locations
State
Region
City / District
அதிகரிக்கும் மக்கள் தொகை, விரிவடையும் நகரம்: கடல் நீரை குடிநீராக ஏற்க தயாராகும் மும்பை மக்கள்

அதிகரிக்கும் மக்கள் தொகை, விரிவடையும் நகரம்: கடல் நீரை குடிநீராக ஏற்க தயாராகும் மும்பை மக்கள்

சென்னைக்கு அடுத்ததாக நாட்டில் மும்பையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மும்பையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு மும்பை நகரமும் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே மும்பைக்கு அடுத்து நவிமும்பை என்ற இரண்டாவது மும்பை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மும்பையை உருவாக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த அளவுக்கு விரிவடையும் மும்பைக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுக்க அங்குள்ள 7 ஏரிகளும் திண்டாடி வருகின்றன. ஒரு ஆண்டு மழை சரியாக பெய்யவில்லையெனில் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.

சென்னை போன்று மும்பையில் எந்த இடத்திலும் போர்வெல் இல்லை. அனைத்து மக்களும், கட்டிடங்களும் மும்பை மாநகராட்சி வழங்கும் தண்ணீரை மட்டுமே 100 சதவீதம் நம்பி இருக்கின்றனர். எனவே விரிவடையும் மும்பையின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த இருக்கிறது. இந்தியாவில் தற்போது சென்னையில் மட்டுமே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இருக்கிறது.

இரண்டாவதாக மும்பையில் அத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு பிறகு, மும்பைக்கு கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டம் முதன் முதலில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது, மும்பை நகரம் இப்போது தினசரி குடிநீர் சிக்கலை சந்தித்து வருகிறது. குடிநீருக்கு இப்போது மும்பை பருவமழையை மட்டுமே நம்பியிருக்கிறது. இதையடுத்து இப்போது, மும்பை மாநகராட்சி நிர்வாகம் வடமேற்கு மும்பையில் உள்ள மலாட் அருகே உள்ள கடற்கரை கிராமமான மனோரியில் ரூ. 4,007 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை உருவாக்கி வருகிறது.

மனோரி ஆலை 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். இஸ்ரேலை சேர்ந்த ஐடிஇ டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த ஆலையை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கு ஆலையை இயக்கும். ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் இத்திட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகளை செய்கிறது.


Nakkeeran 42 minutes ago
Home Flash News