ஸ்டாலின் தலைமையில் இண்டியா கூட்டணி: திருமாவளவன் ஆதரவு
திருச்சி: தமிழக முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்கிற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்தை நானும் வழிமொழிகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்கள் தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என சுருக்கி பார்க்க தேவையில்லை. தமிழக அரசும், மத்திய அரசும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. கூட்டணியில் எந்த குழப்பம் இல்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. இதே கட்டுக்கோப்புடனே தேர்தலை சந்திப்போம்.
கூட்டணி உருவாக்குவதிலும், அதை பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறையோடு இருக்கிறோம்.
இண்டியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறிய கருத்து வரவேற்க வேண்டியது. அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்.