10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என அரசியல் களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. தொடர்ந்து, வாக்குப்பதிவிற்கான ஏற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை நடத்துவதற்கு ஒரு தலைமை அதிகாரி இருப்பார். அவருக்கு உதவியாக 3 வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் இருப்பார்கள். அந்த வகையில் மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 160 பேர் சட்டசபைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த முறை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழக்கப்பட இருக்கிறது. அதாவது, 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில் தேர்தல் நாளுக்கான ஊதியம் மற்றும் 2 நாட்கள் கட்டாய பயிற்சிக்காக தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் ரூ.12,500 ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான மொத்த செலவு சுமார் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது.
2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.350 ஊதியம் பெற்று வந்த தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், இப்போது ஒரு நாளைக்கு ரூ.500 அல்லது மொத்தமாக ரூ.2,000 பெறுவார்கள். ஒரு நாளைக்கு ரூ.250 கெளரவ ஊதியமாக பெற்று வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள், இப்போது ஒரு நாளைக்கு ரூ.400 அல்லது மொத்தமாக ரூ.1,600 பெறுவார்கள்.