தமிழகத்தைச் சேர்ந்த 10 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 10 போலீஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் 3 கட்டங்களாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 2-ம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமும், உதவி ஆணையர்கள் (டிஎஸ்பி) தமிழக அரசால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு மூலமும், அடுத்த கட்டமாக மத்திய அரசு (யுபிஎஸ்சி தேர்வு) மூலமும் ஐபிஎஸ் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இவர்களில் குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் போலீஸாருக்கு பணிக் காலத்தின் அடிப்படையில் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். அந்த வகையில், துணை ஆணையர் மற்றும் எஸ்பி அந்தஸ்தில் தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் எஸ்.அரவிந்த், என்.ஸ்டீபன் ஜேசுபாதம், பி.தங்கதுரை, எஸ்.எஸ்.மகேஷ்வரன், வி.ஆர்.ஸ்ரீநிவாசன், டாக்டர் கே.பிரபாகர், சி.சியாமளா தேவி, எம்.கிங்ஸ்லின், வி.சியாமளா தேவி, டாக்டர் எல்.பாலாஜி சரவணன் ஆகிய 10 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.