100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து சேவை
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து சேவையை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” எனும் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சிப் பேருந்து மற்றும் வாகனங்கள் சேவை தொடக்க விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் பங்கேற்று விழிப்புணர்வு வாகன சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேருந்து சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தவெக பிரச்சாரம்: நிகழ்ச்சியின் முடிவில் குமரகுருபரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெகவினர் வரும் மார்ச் 28-ம் தேதி பெரம்பூர் பகுதியில் 4, 5 இடங்களில் பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்கள் என்பதால் காவல்துறை ஆலோசனையுடன், விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்” என்றார்.