குஜராத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய பஞ்சாப்; ரஷித்கான் பந்தில் கூப்பர் ஆடிய ஷாட் நம்பமுடியாததாக இருந்தது!: கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
நியூசண்டிகர்: 19வது சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் நேற்றிரவு நடந்த 4வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 39, ஜோஸ் பட்லர் 38 ரன் அடித்தனர். பஞ்சாப் பவுலிங்கில் விஜய்குமார் வைஷாக் 3, யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் இம்பாக்ட் வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 37 (24பந்து), கேப்டன் ஸ்ரேயாஸ் 18, நேஹல் வதேரா 3, ஷஷாங்க் சிங் 4, மார்கஸ் ஸ்டோனிஸ் 0, மார்கோ ஜான்சன் 9 ரன்னில் அவுட் ஆகினர். நாட் அவுட்டாக கூப்பர் கனோலி 44 பந்தில் 5 பவுண்டரி,5 சிக்சருடன் 72 ரன், சேவியர் பார்ட்லெட் 5 பந்தில் 11 ரன் எடுத்தனர். 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்த பஞ்சாப் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கூப்பர் கனோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது: கடந்த சீசனை போலவே நாங்கள் நன்றாக இருக்கிறோம். நான்எதையும் கெடுத்துவிட விரும்பவில்லை. கூப்பர் கனோலி ஆடிய சில ஷாட்டுகள் , குறிப்பாக ரஷித்கான் பந்துவீச்சில் அவர் ஆடிய ஷாட், பார்ப்பதற்கு நம்பமுடியாததாக இருந்தது. திடீரென நாங்கள் அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்தோம். ஐபிஎல்-ல் இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான். நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். கூப்பர் அங்கே இருந்தார், அவர் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தார். பவுலிங்கில் வைஷாக் கடந்த சீசனில் வெளிப்படுத்திய ஃபார்மை இந்த சீசனிலும் தொடர்கிறார். அவர் பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர் என்றார். பஞ்சாப் தனது அடுத்த போட்டியில் வரும் 3ம் தேதி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும், குஜராத் டைட்டன்ஸ் 4ம் தேதி அகமதாபாத்தில் ராஜஸ்தான் அணியுடனும் மோத உள்ளன.