ஏப்.1 முதல் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அமலுக்கு வந்த புதிய விதிகள் என்னென்ன? முழு விவரம்
டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஏற்படும் மோசடிகளை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது பெருகிவிட்டது. சாதாரண பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் கடை வீதிக்கு போனால் பர்ஸ் நிறைய பணம் வைத்துகொண்டு செல்ல வேண்டியிருக்கும். ஆனால், தற்போது கையில் ஒரு பைசா ரொக்கமாக இல்லாமல் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி பெருகிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகிவிட்ட அதேவேளையில் , பல மோசடிகளும் அதைவைத்து நடைபெறுவதை பார்க்க முடிகிறது. இதையடுத்து மோசடிகளை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த விதிகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு;
* யுபி.ஐ., கார்டு, மொபைல் வாலெட் போன்ற அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இரண்டு நிலை உறுதிப்படுத்துதல் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒடிபி மட்டுமின்றி பின் நம்பர், கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் போன்ற கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும். இதனால் பரிவர்த்தனை சற்று நேரம் எடுத்துக்கொண்டாலும், மோசடிகளை தடுக்க அதிக பாதுகாப்பு கிடைக்கும்.
*குறைந்த தொகை கொண்ட பரிவர்த்தனைகள் எளிதாக செய்ய முடியும். எனினும், பெரிய தொகை அல்லது புதிய சாதனங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் இருக்கும்.
*பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மோசடி நடந்தால், வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் பயனர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதன் மூலம் புகார்களுக்கு விரைவான தீர்வு கிடைக்கும்.
*இனி ஒரு நாளில் 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். இ.எம்.ஐ., சந்தா போன்ற தானியங்கி பணப்பரிவர்த்தனைகள் இனி இரவு 9.30 மணி முதல் காலை 10 மணிக்கு முன்பாக நடந்து விடும்.