ஈரானுடன் அமெரிக்கா 2-ம் கட்ட பேச்சு: ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் பயணிப்பதாக தகவல்
வாஷிங்டன்: ஈரான் உடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 14 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த இடைக்கால போர் நிறுத்தம் நாளை (ஏப்.22) நிறைவடைய உள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஈரான் உடனான பேச்சுவார்த்தை விரைவில் பாகிஸ்தானில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று (ஏப்.20) தெரிவித்திருந்தார். அதற்காக போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வரும் நகர்வுகளை தங்கள் தரப்பு முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நிலைப்பாடு என்ன? ஹார்முஸ் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக, ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறும்போது, “போர் நிறுத்தம் அமலானது முதல் அமெரிக்காவின் செயல்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. இது போர் நிறுத்தத்தை மீறும் செயல் ஆகும். அமெரிக்காவுடன் அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் திட்டம் இல்லை” என்றார். ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கடற்கொள்ளை தாக்குதல் போன்றது. ஈரான் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். ஈரான் கப்பலில் எங்களது மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலன் கருதி அமெரிக்கா மீதான தாக்குதலை தாமதப்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தன.