ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
உதயசந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்? முதல்வரின் தனிச் செயலாளர் - 3 என்றதொரு புதிய பொறுப்பில் விஷ்ணு நியமனம்
சென்னை : தமிழக அரசின் நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலர் எம். சாய் குமார் இன்று (மே 12) மாலை வெளியிட்டார். அதில், வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பி. அமுதா மாற்றப்பட்டு முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர்/ நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை செயலராக உதயசந்திரன் மாற்றப்பட்டு சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் கூடுதல் தலைமை செயலராக இருந்த எம். ஏ. சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த டி. கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு கே. நந்தகுமார் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலராக டாக்டர் எஸ். ஸ்வர்ணா நியமிக்கப்பட்டார். முதல்வரின் கூடுதலாக செயலராக விஷ்ணுவும் முதல்வரின் 3-ஆவது முதன்மை செயலராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டனர்.
முதல்வரின் தனிச் செயலாளர் - 3 என்றதொரு புதிய பொறுப்பில் விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே முதல்வரின் தனிச்செயலராக செந்தில் குமார் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி. உதயசந்திரன், டி. கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.