பழனி அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய ஐகோர்ட் தடை
மதுரை: பழனி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தற்காலிக பணியாளர்கள் 25 பேரை பணி நீக்கம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனியை சேர்ந்த எம்.நாச்சிமுத்து, ம.மரகதம் உள்ளிட்ட 25 பேர் தாக்கல் செய்த மனுவில், ‘நாங்கள் பழனியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தற்காலிக தூய்மை பணியாளர், செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறோம். இந்நிலையில் மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் புதிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் எங்களுக்கு பணி வழங்க மறுக்கிறது.
எங்களை வெளியேற்றி விட்டு புதிதாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கேட்டதற்கு நாங்கள் குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை வழங்கக்கோரிய வழக்கு தாக்கல் செய்திருப்பதால் வேலை வாழங்க முடியாது என்கின்றனர். எனவே எங்கள் 25 பேரையும் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் இன்று விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் திருமுருகன் வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘பழனி அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளர், செவிலியர் உதவியாளர்களாக பணிபுரிந்து வரும் மனுதாரர்கள் 25 பேரையும் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து நீக்கக் கூடாது. மனு தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகள் இயக்குனர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது’ கூறியுள்ளார்.