கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். கடந்த 2023 கர்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வா் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமாா் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சிமுறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வா் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை முன்வைத்ததை ஏற்று, சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் முதல்வர் மாற்றம் செய்யப்படாததால் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று, சித்தராமையா இன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, கர்நாடக அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தனது இல்லத்தில் இன்று காலை விருந்து வைத்த சித்தராமையா, அமைச்சர்கள் மத்தியில் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதையும், அடுத்த முதல்வராக டி.கே. சிவக்குமாரை பரிந்துரைப்பதாகவும் முறைப்படி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கர்நாடக ஆளுநர் தாவர் சாந்த் கெலாட்டிடன் இன்று பிற்பகல் ராஜிநாமா கடிதத்தை சித்தராமையா சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக சொந்த ஊரான இந்தூருக்கு புதன்கிழமை இரவு ஆளுநர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் ஆளுநர் மாளிகைக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் நேரில் சென்ற சித்தராமையா, ஆளுநரின் செயலாளர் பிரபு சங்கரிடம் ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரபு சங்கர், ஆளுநர் இல்லாததால் கடிதம் பெற்றுக் கொண்டேன். ஆனால், ராஜிநாமாவை ஏற்பது தொடர்பாக ஆளுநர்தான் முடிவெடுப்பார் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா பேசியதாவது: “காங்கிரஸ் கட்சி தலைமையின் உத்தரவை ஏற்று, முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் வழங்கியுள்ளேன். இன்றிரவுதான் ஆளுநர் கர்நாடகம் திரும்புகிறார். அதனால், அவரது அலுவலகத்தில் ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன்.
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் எனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஏற்பார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு தனிப் பெரும்பான்மை இருக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.