Select Location
All Locations
State
Region
City / District
இருதரப்பு உறவின் இயல்புநிலைக்கு எல்லையில் அமைதி முக்கியம்: இந்தியா - சீனா ஒப்புதல்

இருதரப்பு உறவின் இயல்புநிலைக்கு எல்லையில் அமைதி முக்கியம்: இந்தியா - சீனா ஒப்புதல்

புதுடெல்லி: எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவதே இரு நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்தியாவும் சீனாவும் தெரிவித்துள்ளன. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக இந்தியாவும், சீனாவும் ஆலோசனை மேற்கொள்ளும் நோக்கில், எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணிக்குழுவின் 35-வது கூட்டம் பெய்ஜிங்கில் நேற்று (மே 27) நடைபெற்றது. இந்திய குழுவுக்கு வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் (கிழக்காசியா) சுஜித் கோஷூம், சீன குழுவுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரத் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சியும் தலைமை தாங்கினர்.

இக்கூட்டம் குறித்த அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாகவும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அமைந்திருந்தன. இரு தரப்பினரும் இந்தியா - சீனா எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழலை ஆய்வு செய்தனர். எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்த முன்னேற்றம், இருதரப்பு உறவுகளை படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு வழி வகுத்துள்ளது. எல்லை தாண்டிச் செல்லும் நதிகள் குறித்த நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற வேண்டும் என்று இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. 24-வது சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டவை உள்பட, பல்வேறு செயல்முறைகளின் வாயிலாக, தூதரக மற்றும் ராணுவ மட்டங்களில் வழக்கமான பரிமாற்றங்களையும் தொடர்புகளையும் தொடர்ந்து பேணிக் காக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

சீனாவில் நடைபெற உள்ள அடுத்த சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்துக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இரு தரப்பினரும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர். இந்த வருகையின்போது இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் சுஜித் கோஷ், சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரத் துறை தலைமை இயக்குநர் லியு ஜின்சாங்கைச் சந்தித்துப் பேசினார். மேலும், சீன வெளியுறவுத் துறையின் உதவி அமைச்சர் ஹாங் லெய் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News