மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஊதியம் தரவில்லை என புகார்
திருச்சி: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஊதியம் தரவில்லை என கூறி புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாகர்கோவில், கள்ளக்குறிச்சி, கோவை, சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது வரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு இத்திட்டத்தின் பணியாளர்கள் நேரடியாகச் சென்று, மக்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் மாத்திரைகளை வழங்கும் பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இத்திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தொடக்கத்தில் தினமும் 2 மணி நேர வேலை என்ற அடிப்படையிலேயே இப்பணியைச் செய்து வந்துள்ளனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே 8 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தியதால், அவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி வந்துள்ளனர். இருப்பினும், அதற்கேற்றவாறு அவர்களுக்கான 3 மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல், கடந்த 5 ஆண்டுகளாக 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.