Select Location
All Locations
State
Region
City / District
“மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டை விடாதீர்கள்” - பேரவையில் உதயநிதி அறிவுரை

“மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டை விடாதீர்கள்” - பேரவையில் உதயநிதி அறிவுரை

சென்னை: “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. சிறுகுறு தொழில்கள் மின் வெட்டால் முடங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் மின்சாரம் இல்லை என்று விடுமுறை விடுகிறார்கள். மின்வெட்டுப் பிரச்சினையை தீர்க்க அரசின் நடவடிக்கை என்ன என்று முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.

ஆளுநர் மகிழ்ச்சிதான் முக்கியமா?

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறை பாடப்பட்டது. ஆனால், தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபை மீறி தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறை மற்றும் தேசிய கீதம் ஒருமுறை பாடுவது தான் வழக்கம். ஆனால், தேசிய கீதம் மட்டும் ஏன் 2 முறை பாடப்பட்டது. இதே கோரிக்கையை இதற்கு முன்பு இருந்த ஆளுநர் எங்கள் ஆட்சிகாலத்திலும் வைத்தார். ஆனால், எங்கள் முதல்வர் உறுதியாக இருந்து இந்த அவையின் இறையாண்மையை காத்தார். பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. அதனால் அங்கே வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை நமது ஆளுகைக்குள் உள்ளது. நமது ஆளுகையில் உள்ள சட்டப்பேரவையை ஏன் ஆளுநர் வசம் ஒப்படைத்தீர்கள். என்ன சமரசம் நடந்தது. ஏன் தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. அப்படியானால் தமிழ்த்தாய் வாழ்த்தையும் இருமுறை பாடச் சொல்லி நீங்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கலாம்.

தவெக உறுப்பினர்கள் பேசும்போது, “ஆளுநர் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டோம்; ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தார்” என மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள். தவெகவினருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை விட ஆளுநர் மகிழ்ச்சியாக இருந்தது தான் முக்கியம் போல தோன்றுகிறது. உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?” என்றார். உதயநிதியின் உரையை இடைமறித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற நமது அனைவரின் நோக்கத்தின்படியே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டிருக்கிறது. அதேபோல, தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டத்தில் என்ன தவறு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

‘தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள்’

தொடர்ந்து பேசிய உதயநிதி, “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள். மின் துறை அமைச்சர் இரண்டு நாட்கள் பொறுமையாக இருங்கள் என்கிறார். அப்படியானால் அடுத்த இரு நாட்கள் மின்சாரம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. முன்பெல்லாம் புயல் மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். ஆனால் இந்த ஆட்சியில்தான் மின்சாரம் இல்லை என்று விடுமுறை விடுகிறார்கள். விசிக தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் சென்றபோது மின்சாரம் இல்லாததால், ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாமலே திருமாவளவனுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பவர் ஷேரிங் கொடுத்த கட்சிக்கு, இப்போது தமிழகத்துக்கு பவர் கொடுக்க முடியவில்லை. இரு நாட்கள் முன்பும் ஆளும் கட்சி தவெக அலுவலகத்திலேயே மின் வெட்டு ஏற்பட்டிருக்கிறது. “ஆளுங்கட்சியா இருந்தும் பனையூரிலேயே பவர் இல்லையே?” என அங்கு வந்தவர்கள் புலம்பிவிட்டுப் போனதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு இப்போது இருளில் மூழ்கியுள்ளது. சிறுகுறு தொழில்கள் மின் வெட்டால் முடங்கியுள்ளது. மின்வெட்டால் மோட்டார் பம்பு செட்டுகள் இயக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மின்வெட்டுக்கும் திமுகதான் காரணம் என்கிறார்கள். எங்கள் ஆட்சியில் ஏற்படாத மின்வெட்டு, இப்போது ஏற்படக் காரணம் நிர்வாக திறமையின்மையா? அல்லது தொழில்நுட்ப பிரச்சினை உள்ளதா. அதனை தீர்க்க அரசின் நடவடிக்கை என்ன என்று முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.” என்றார்.


Hindu Tamil 2 hours ago
Home Flash News