திருச்செந்தூர் கோயிலில் சேவை கட்டணம் பல மடங்கு உயர்த்த முடிவு.1,500 ரூபாய் பூஜை கட்டணம் 6,500 ரூபாயாக உயர்கிறது..!
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கதேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக டஹ்கவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியை கருத்தில் கொண்டும், கோவிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்திடும் வகையிலும், நிர்வாக நலன் கருதி தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில், தற்போதுள்ள சேவை கட்டணங்கள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தங்கரத உலா திட்டத்திற்கு 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தவும், அதற்கு நிரந்தர வைப்பு நிதியை 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சண்முகார்ச்சனை கட்டணத்தை, 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூலவர் அபிஷேகத்திற்கு, 1,500 ரூபாய் வாங்கிய இடத்தில் இரண்டு நபர்களுக்கு, 10,000 ரூபாய் பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்பது கால பூஜைக்கு, 1,500 ரூபாய்க்கு பதிலாக, 6,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதில், நிரந்தர வைப்பு நிதியாக இருந்த 20,000 ரூபாயில் இருந்து 90,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில், 500 ரூபாயும், விழா நாட்களில், 2,000 ரூபாய் என இருந்ததை அனைத்து நாட்களிலும் 2,500 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. கோவிலில் வருவாய் குறைந்துள்ளதால், இதை செயல்படுத்த மக்களிடம் ஆட்சேபனை ஏதும் இருந்தால், வரும் 7ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் கோவில் நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வருவாய் குறைவை காரணம் காட்டி, சேவை கட்டணங்கள், அபிஷேக சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.