Select Location
All Locations
State
Region
City / District
FCRA சட்டத் திருத்தங்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு!

FCRA சட்டத் திருத்தங்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு!

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்த மசோதா, 2026-க்கு எதிராக 'சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம்' (Joint Action Forum on Minorities) தொடங்கியுள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது. புது தில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ரியாஸ் ஃபரங்கிப்பேட் கலந்து கொண்டு இந்த ஆதரவை உறுதிப்படுத்தினார். இக்கூட்டத்தில், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் ஜூலை 3 அன்று நாடு தழுவிய எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் மற்றும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும் என்றும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் ஊடகங்களிடம் பேசிய கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன், ஒன்றிய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள இந்த சட்டத்திருத்தங்கள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டவை என்று விவரித்தார். மேலும், இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs), கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் செயல்பாடுகளைக் கடுமையாக முடக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். குறிப்பாக, எஃப்சிஆர்ஏ (FCRA) கணக்குகளை புது தில்லியில் உள்ள எஸ்பிஐ முதன்மைக் கிளையில் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும், நிதிப் பரிமாற்றங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளும் பெரும் சுமையாக மாறும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், நிர்வாகச் செலவினங்களுக்கான வரம்பை 50 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாகக் குறைப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலன், மருத்துவம், கல்வி மற்றும் அவசர நிவாரணப் பணிகள் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் எச்சரித்துள்ளார்.


Dinakaran 1 hour ago
Home Flash News