Select Location
All Locations
State
Region
City / District
ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல்: மீண்டும் மேற்காசியாவில் போர் பதற்றம்?

ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல்: மீண்டும் மேற்காசியாவில் போர் பதற்றம்?

தெஹ்ரான்: ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக தகவல். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு வைத்தார். இதையடுத்து அமெரிக்கா இந்த தாக்குதல் மேற்கொண்டது.

ஈரானில் உள்ள ஏவுகணை தளம், ட்ரோன்கள் வைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள ரேடார்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. “போர்நிறுத்தத்தை அப்பட்டமாக மீறும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டோம்” என்று குறிப்பிட்டு அமெரிக்க ராணுவ தலைமையகம் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல் படை பதிலடி இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இதை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், அமெரிக்கா அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டால் தங்களது பதிலடி மிக தீவிரமாக இருக்கும் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. இந்நிலையில், “வன்முறைக்கு வன்முறைதான் பதில்” என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த மோதல் காரணமாக மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Hindu Tamil 2 hours ago
Home Flash News