Select Location
All Locations
State
Region
City / District
1000 ஏவுகணைகள் தயார்... ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

1000 ஏவுகணைகள் தயார்... ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் குழுக்கள் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தின.

குண்டு வீச்சு

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறலாம் என்ற சூழலில் மீண்டும் மோதல் வெடித்தது. ஹோர்முஸ் ஜலசந்தியில் தாங்கள் விதித்த கட்டுப்பாட்டை மீறியதாக வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை-டிரோன்களை வீசியது. நேற்று அமெரிக்கா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் புதிய சதி திட்டத்தை தீட்டியதாக இஸ்ரேல் உளவுத்தகவல் ஒன்றை அமெரிக்காவுக்கு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹோர்முஸ் ஜலசந்தி

இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா கெடு ஒன்றை விதித்து உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை போக்குவரத்துக்கு திறந்திருப்பதாகவும், இனி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா 24 மணி நேர கெடுவை விதித்து உள்ளது.

இதை செய்யத் தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி அடைந்தால் அதற்கான மாற்றுத் திட்டங்களும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கெடு தகவல் மத்தியஸ்தர்கள் மூலம் ஈரானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இதற்கிடையே டிரம்ப் ஈரானுக்கு அதிரடி எச்சரிக்கையை விடுத்து உள்ளார். அவர் கூறும்போது, என்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடவோ ஈரான் அரசு முயன்றால், அந்நாட்டை தாக்க 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. அதைத் தொடர்ந்து உடனடியாக மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்படும். படுகொலை அல்லது படுகொலை முயற்சி நடந்தால் ஈரானுக்கு எதிராகப் பதிலடி கொடுக்குமாறு ராணுவத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளேன். ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகச் சிதைத்து அழிக்க அமெரிக்க ராணுவம் தயாராகவும், விருப்பத்துடனும், திறனுடனும் உள்ளது. ஈரான் எங்களிடம் பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கேட்டுள்ளது. நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம். ஆனால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவர்களுக்கு தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டோம். அதேவேளையில் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தில் அணுசக்தி தொடர்பான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Malaimalar 1 day ago
Home Flash News