தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தை திறக்காவிட்டால்...! தலைமை நீதிபதி எச்சரிக்கை!
உச்ச நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தை திறக்காவிட்டால், நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என்று மெட்ரோ நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி 16 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் கடந்த நான்கு நாள்களாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று காலை ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங், உச்ச நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் உள்பட பல்வேறு ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், நீதிமன்ற பணியாளர்களும், வழக்கறிஞர்களும் நேரில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார். அப்போது பேசிய தலைமை நீதிபதி, இன்று மதிய உணவு இடைவெளிக்குள் உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை திறக்காவிட்டால், இதில் நான் தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், போராட்டங்கள் மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வழக்கறிஞர்களால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என்று மற்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் சூர்ய காந்த் தெரிவித்தார்.
முன்னதாக, சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையின் அடக்குமுறை தொடர்பாக முறையிடப்பட்ட வழக்கில், “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், இதுதொடர்பான காணொலிகளைப் பார்க்க விருப்பமில்லை, நேரமுமில்லை” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதன்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.