Select Location
All Locations
State
Region
City / District
ரூ.1,264 கோடி முதலீட்டில் புதிய ரயில் பாதைகள்... ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ரூ.1,264 கோடி முதலீட்டில் புதிய ரயில் பாதைகள்... ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா இடையிலான முக்கியமான பொருளாதார வழித்தடத்தில் அமைந்துள்ள பெல்லாரி மற்றும் குண்டக்கல் இடையே மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டம் மற்றும் 'பவ்ய ரசாயன்' (Bhavya Rasayan) திட்டம் ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சரவையின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெல்லாரி-குண்டக்கல் ரயில் வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 1,264 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும்; அத்துடன் ஹோஸ்பேட் முதல் ஹுப்பள்ளி வரையிலான ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். சில மாதங்களுக்கு முன்பு பல்லாரி முதல் ஹோஸ்பேட் வரையிலான பாதைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது 46 கி.மீ நீளமுள்ள திட்டம். இதற்கான மொத்த முதலீடு ரூ. 1,264 கோடி, இதில் 80 சதவீத நிலம் ஏற்கனவே கிடைத்துவிட்டது; மீதமுள்ள 20 சதவீத நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

இது தவிர நாட்டில் ரசாயனத் துறையை புதிய முறையில் மேம்படுத்துவதற்கான ஒரு புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மூன்று பிரத்யேக 'பிளக்-அண்ட்-பிளே' (plug-and-play) ரசாயனப் பூங்காக்களை BHAVYA - Rasayan Scheme திட்டத்தின் கீழ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களாகும் என் கூறினார். ரசாயனத் தொழில் மூலம் மற்ற பல தொழில்களுக்கான மூலப்பொருட்களை எளிதாக வழங்க முடியும். மூன்று பிரத்யேக ரசாயனப் பூங்காக்களை நிறுவ முடிவு செய்துள்ளதன் அடிப்படை நோக்கம் இது தான். ரசாயனத் தொழிலுக்கு சுற்றுச்சூழல் அக்கறைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு முக்கியமானவை. இந்த ஆலைகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் ரூ.1000 கோடி வழங்கப்படும் என்றார்.


Dinakaran 1 hour ago
Home Flash News